Monday, January 8, 2007

எனது அப்பாவின் எண்பது ஆண்டுப் பயணம்.

எனது அப்பாவின் எண்பது ஆண்டுப் பயணம். அவருடைய பிறந்த நாள் இன்று. நாங்கள் நால்வரும் சென்று அருமையாய் கொண்டாடினோம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் பூலாங்குளத்தில் பிறந்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் விளையாடி, வளர்ந்து, படித்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் சென்னை மா நகருக்குள் நுழைந்து, ரயில் பணி ஏற்று, அழகு இளைஞனாக, எங்கள் அன்னையை மணந்து, காதலித்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் பிள்ளை பேறு பெற்று
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவர்களை அரும்பாடுபட்டு வளர்த்து,
என்னயும் இவ்வுலகிக்ற்கு காட்டி,
உங்கள் கனவு இல்லத்தை கட்டி
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய ஆரம்பித்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் பேத்திகளை கொஞ்சி, எங்கள் அண்ணனை உயர் கல்வி படிக்க செய்து, அவர் நலம் கண்டு
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் என்னையும் திருமணம்செய்து கொடுத்து ஓய்வெடுக்க நினைத்த நேரத்தில், எங்கள் பேரன்புக்குரிய பெரிய அத்தானை இழக்க நேரிட்டு, பேத்தியரை சீராட்டி வளர்த்து
இரண்டாயிரம் ஆண்டு கண்டு, பேத்தியருக்கு திருமணம் முடித்து....... கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தியர் முதலான பேறுகளைப் பெற்று ........ அப்பப்பா உங்களின் வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.......
இவையெல்லாவற்றிற்கும் மேலாக எங்களை ஒழுங்கு நெறிமுறையில் வழி நடத்தி செல்லும் எங்கள் அன்பு தந்தையே!!! உங்களுக்கு எனது நூறு கோடி வணக்கம்!!!
நீங்கள், என்னை இவ்வுலகிற்கு ஏன் கொண்டு வந்தீர்கள் என பலமுறை நான் சிறுபிள்ளையாய் நினைத்ததுண்டு!
அதன் விளக்கத்தை இன்று காண்கிறேன்.....

வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என சொல்வொர் பலர்
வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொன்னவர் சிலரே.
அந்த சிலருக்குள் ஒருவராய் உங்களைக்காண்கிறேன்.

தூயொழுக்கம் உங்கள் மறு பெயர்
தியாகம் உங்கள் இயல்பு
அன்பு உங்கள் கண்கள்
ஆதரவு உங்கள் கைகள்
நேசம் உங்கள் பார்வை
பாசம் உங்கள் இருப்பிடம்
தமயந்தி(அம்மா) உங்கள் நிழல்


நீங்கள் நீண்ட நெடுங்காலம், எங்களை இப்படியே வழி நடத்தி செல்ல, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

அப்பா உங்களுக்கு பிறந்த நாள் பரிசென்று ஒன்றும் கொண்டு வரவில்லை. ஏனென்றால் எந்தப் பரிசும் எனக்கு உகந்ததாகப்படவில்லை. நீங்கள் உலகத்தில் உள்ள எல்லாப்பரிசிற்கும் மேல். உங்களை விட மேலான பரிசு எனக்கு கிடைக்கவேயில்லை!!!
அப்பா உங்கள் வயது என்னைப்பொறுத்தவரை எட்டுதான். இந்த எட்டின் வலதுப்பக்கம் இருக்கும் பூஜ்ஜியம், வெறும் பூஜ்ஜியம் இல்லை. இந்த பூஜ்ஜியத்திற்குள் தான் உங்களின் இவ்வுலக அனுபவம் என்ற எண்பது ஆண்டுகள் அடங்கியுள்ளது. இந்த பூஜ்ஜியதிற்குள் இருக்கும் அனுபவ பாடங்களை , நான், எனது அக்காள் இருவர், எனது அண்ணன், எங்களைச்சர்ந்தவர்கள் என அனைவரும் அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரமாக அள்ளிப் பருகி வருகிறோம்.
எங்களை வழி நடத்தி செல்ல இந்த அனுபவம், பத்தாது என்று தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கை அனுபவம் இன்னும் அதிகமாக எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன்.!!!!!!


இனிதே தொடரட்டும் உங்கள் வாழ்க்கைப்பயணம்!!!
12-Jan-2007
உங்கள் அன்பு மகள்
ராஜேஸ்வரி சங்கர்

No comments: