Tuesday, January 30, 2007

வள்ளுவரின் பார்வையில்

"பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணு தரும்."
ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல்பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலை குனிய வேண்டிய தாக் ஆகி விடும்.

"இல்லாள் கண் தாழ்ந்தை இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்."
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகின்ற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.

"இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையோர் தோ ளஞ்சுபவர்."
அறிவும், பண்பும் இல்லாத மனைவி , அழகாக இருக்கிறாள் என்பதற்க்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள் , தங்களை தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்த பெருமையும் கிடையாது.

வயதீகம்.

ஏன் சில ஆண்கள், தனது வயதான பெற்றோரை பார்த்துக் கொள்வதில்லை?
எனக்குத் தெரிந்த ஒருவர், அவருடைய மனைவி, அவரை, ரொம்ப பயமுறுத்துவதாக சொல்கிறார். ஏன் என்று கேட்டால், நான் எனது வயது முதிர்ந்த பெற்றோரைப் பார்த்து விட்டு வந்தால், மனைவி தூக்குப் போட்டுக் கொள்வேன் என்கிறாளாம். பிள்ளைகளைக் கொண்டு, அவர்களிடம் காட்டக் கூடாது என்று கட்டளையிடுகிறாளாம். பெற்றோர் அவர்களைத் தேடி வரக் கூடாது என்று ஊளையிடுகிறாளாம்.
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு ஐ.ஐ.டி யில் படித்து பெரிய வேலையில் இருக்கும், இந்த மனிதர், ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று. ஏன் இப்படி, தன்னுடைய மனைவிக்கு கைப்பாவையாகிவிட்டார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அவருடைய படிப்புத் திறனிலும், வேலை பார்க்கும் திறனிலும், நான் வெகுவாக வியந்திருக்கிறேன். இப்படிப்பட்டவர், தனது 80 வயதான பெற்றோரை பெண்டாட்டி சொல் கேட்டு தனியே தவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம், என்பது எனக்குப் புரியவேயில்லை. நன்றாய் பல விதமான கருத்துக்களை, நாட்டு நடப்புகளை, விஞ்ஞான கூற்றுக்களை பேசி அலசும் இந்த மனிதர், தனது, பெற்றோர் என்று வரும் போது மட்டும் நடந்துக்கொள்ளும் முறை முரண்பாடாக உள்ளதே?
இப்படிப்பட்ட மனிதர்கள் எந்த விதத்தில் சேர்த்தி ?

Friday, January 12, 2007

மனது


கடவுள் படைப்பில் மனிதனின் மனது என்பது அதீதமானது. இந்த மனதுக்குள் என்ன வேன்டுமானலும் அடைத்து வைக்கலாம். இதற்க்கு அளவே கிடையாது. 30ஜீபீ, 40ஜீபீ என்றெல்லாம் அடக்கி வைக்க முடியாது. கடலை விட ஆழமாக அளக்க முடியாதது மனது. இந்த மனதுக்குள் குப்பையும் இருக்கும், கூவங்களும் ஓடும், அதெ சமயம், ஆன்மீகமும் தவழ்ந்து கொண்டிருக்கும்.
மனது என்பதை கடவுள் படைப்பில் சற்று விசித்திரமானது. மூளையைப்போலில்லாமல் மனது எல்லொருக்கும், ஒரெ மாதிரியாகத்தான் படைத்திருப்பதாகத்தான் தெரிகிறது. மனசாட்சி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்பது என் கருத்து. ஒருவன் புத்திசாலியாக இருந்தாலும், முட்டாளாயிருந்தாலும், மனசாட்சி என்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமென்பது என் கருத்து.
மனதென்னும் திரையரங்கில் என்ன படம் வேண்டுமானாலும் ஓட்டிக்கொள்ளலாம். இதைத் தடுப்பவர் யாரும் கிடையாது, நம் மனசாட்சியைத் தவிர. இப்படி குப்பைகளையும், கண்ட கண்ட எண்ணங்களைச் சேர்த்துக்கொண்டே போவதால், இந்த மனதுக்குள் பெரிய பூகம்பங்களும், சுனாமிகளும், பேரழிவுகளும் நிகழ்கின்றன என்றே கருதுகிறேன். அப்படியானால், இந்த மனதை அவ்வப்பொது சுத்தப்படுத்துதல் அவசியம் என்றே தோன்றுகிறது. ஏன் அவசியம் என்றால், என்னதான், அளவிற்க்கு அதிகமாய், நாம் மனதில் பாரத்தை சேர்த்துக்கொண்டே போனாலும், இந்த மனது தாங்கிக்கொள்கிறது என்பதால், நாம் கவலைப்படுவதேயில்லை. ஆனால் நிஜத்தில் அப்படியில்லை. மனதிற்க்கும் பாரம் என்று ஒன்று உண்டு. ஆகவே, மனபாரத்தால் விளையும் அழுத்தங்களை, களையெடுப்பது அவசியமாகிறது. இல்லையென்றால், மனிதன், மன அழுத்தங்களால், பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தற்க்கொலை என்னும் எண்ணங்களின் எல்லைக்குக்கூட சென்று விடுகிறான். என்னவானால் என்ன? எல்லவாற்றையும் விட்டு விட்டேன். எல்லோரையும் மன்னித்து விட்டேன் என்ற மனப்பான்மை, மனிதனுக்கு சாமானியமாய் வருவதில்லை. பாரம் ஏற ஏற மனிதன், பெருந்தன்மையை இழக்க ஆரம்பிக்கிறான் என்றே தோன்றுகிறது.இறுமாப்பிற்க்கு இறையாகிறான். ஆங்கிலத்தில் ஈகோ என்கிறார்கள்.
இந்த மனதை எப்படி சுத்தப்படுத்துவது என்பது பெரிய காரியம்தான். இரவி ஷங்கர் மாதிரியான குருமார்கள் மிகவும் எளிது என்கிறார்கள். பிராணயாமம், யோகா மூலம் மனதை சுத்தப்படுத்தலாம் என்கிறார்கள்.
சின்ன சிலேட்டுப்பலகையை துடைத்து சுத்தப்படுத்துதல் போல, மனதையும் சுத்தமாக்கலாமென்கிறார்கள்.
நான் முயன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும், பிராணயாமம், யோகா செய்து பாருங்களேன்.
மனித ஜென்மமாக பிறந்ததினால், மொத்தத்தில் நல்லவர்களாய் வாழ்ந்துவிட்டு போகவேண்டும் என்பதே என் விருப்பம்.
இன்றோடு, என்னைத் துன்பப்படுத்தியவர்கள் அனைவரையும் மன்னித்து விட்டேன் என்று சொல்லிப்பாருங்களேன், மிகவும் கடினம்தான், ஆனால் நன்றாக சுகமாக இருப்பதாய் உணர்வீர்கள்.
எனக்கு எதிரிகளே இல்லை என்று தினம் ஒரு முறை சொல்லிப்பாருங்களேன், மிகவும் இயல்பாக உணர்வீர்கள்.
இன்று புதிதாய் பிறந்ததாக நினையுங்களேன், பழைய குப்பையெல்லாம் மனதை விட்டுப் பறந்துவிட்டதாய் உணர்வீர்கள். இதன் தொடர்பான கதை ஒன்றை பிரிதொரு நாள் சொல்கிறேன்.
மனதை, மிக சுத்தமாய் வைக்க வைக்க, நம் எண்ணங்களும், செயல்களும், நிறைவாகச் செயல்படுவதை நான் உணர்கிறேன்.

Monday, January 8, 2007

எனது அப்பாவின் எண்பது ஆண்டுப் பயணம்.

எனது அப்பாவின் எண்பது ஆண்டுப் பயணம். அவருடைய பிறந்த நாள் இன்று. நாங்கள் நால்வரும் சென்று அருமையாய் கொண்டாடினோம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் பூலாங்குளத்தில் பிறந்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் விளையாடி, வளர்ந்து, படித்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் சென்னை மா நகருக்குள் நுழைந்து, ரயில் பணி ஏற்று, அழகு இளைஞனாக, எங்கள் அன்னையை மணந்து, காதலித்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் பிள்ளை பேறு பெற்று
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவர்களை அரும்பாடுபட்டு வளர்த்து,
என்னயும் இவ்வுலகிக்ற்கு காட்டி,
உங்கள் கனவு இல்லத்தை கட்டி
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய ஆரம்பித்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் பேத்திகளை கொஞ்சி, எங்கள் அண்ணனை உயர் கல்வி படிக்க செய்து, அவர் நலம் கண்டு
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் என்னையும் திருமணம்செய்து கொடுத்து ஓய்வெடுக்க நினைத்த நேரத்தில், எங்கள் பேரன்புக்குரிய பெரிய அத்தானை இழக்க நேரிட்டு, பேத்தியரை சீராட்டி வளர்த்து
இரண்டாயிரம் ஆண்டு கண்டு, பேத்தியருக்கு திருமணம் முடித்து....... கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தியர் முதலான பேறுகளைப் பெற்று ........ அப்பப்பா உங்களின் வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.......
இவையெல்லாவற்றிற்கும் மேலாக எங்களை ஒழுங்கு நெறிமுறையில் வழி நடத்தி செல்லும் எங்கள் அன்பு தந்தையே!!! உங்களுக்கு எனது நூறு கோடி வணக்கம்!!!
நீங்கள், என்னை இவ்வுலகிற்கு ஏன் கொண்டு வந்தீர்கள் என பலமுறை நான் சிறுபிள்ளையாய் நினைத்ததுண்டு!
அதன் விளக்கத்தை இன்று காண்கிறேன்.....

வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என சொல்வொர் பலர்
வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொன்னவர் சிலரே.
அந்த சிலருக்குள் ஒருவராய் உங்களைக்காண்கிறேன்.

தூயொழுக்கம் உங்கள் மறு பெயர்
தியாகம் உங்கள் இயல்பு
அன்பு உங்கள் கண்கள்
ஆதரவு உங்கள் கைகள்
நேசம் உங்கள் பார்வை
பாசம் உங்கள் இருப்பிடம்
தமயந்தி(அம்மா) உங்கள் நிழல்


நீங்கள் நீண்ட நெடுங்காலம், எங்களை இப்படியே வழி நடத்தி செல்ல, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

அப்பா உங்களுக்கு பிறந்த நாள் பரிசென்று ஒன்றும் கொண்டு வரவில்லை. ஏனென்றால் எந்தப் பரிசும் எனக்கு உகந்ததாகப்படவில்லை. நீங்கள் உலகத்தில் உள்ள எல்லாப்பரிசிற்கும் மேல். உங்களை விட மேலான பரிசு எனக்கு கிடைக்கவேயில்லை!!!
அப்பா உங்கள் வயது என்னைப்பொறுத்தவரை எட்டுதான். இந்த எட்டின் வலதுப்பக்கம் இருக்கும் பூஜ்ஜியம், வெறும் பூஜ்ஜியம் இல்லை. இந்த பூஜ்ஜியத்திற்குள் தான் உங்களின் இவ்வுலக அனுபவம் என்ற எண்பது ஆண்டுகள் அடங்கியுள்ளது. இந்த பூஜ்ஜியதிற்குள் இருக்கும் அனுபவ பாடங்களை , நான், எனது அக்காள் இருவர், எனது அண்ணன், எங்களைச்சர்ந்தவர்கள் என அனைவரும் அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரமாக அள்ளிப் பருகி வருகிறோம்.
எங்களை வழி நடத்தி செல்ல இந்த அனுபவம், பத்தாது என்று தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கை அனுபவம் இன்னும் அதிகமாக எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன்.!!!!!!


இனிதே தொடரட்டும் உங்கள் வாழ்க்கைப்பயணம்!!!
12-Jan-2007
உங்கள் அன்பு மகள்
ராஜேஸ்வரி சங்கர்