Saturday, February 7, 2009

நான் கடவுள்


இன்று 'நான் கடவுள்' பார்த்தேன். பாலாவின் மிரட்டல் என்றே சொல்ல வேண்டும். முதல் இருபத்து நிமிடம் காசியையும், நமக்குத்தெரியாத காட்சிகளையும காட்டி அசத்தி / பயமுறுத்துகிறார். ஒரு நிமிடம், எழுந்து வீட்டிற்கு ஓடி விடலாமா என்று கூட எண்ணினேன். இப்படி கூட நடக்குமா? இப்படிப்பட்ட இடங்கள் கூட இருக்கின்றதா என்று நம்மை மிரள வைக்கிறார் பாலா! ஆர்யாவை பார்த்து என்னால் ஒன்றும் கணிக்க முடியவேயில்லை. ஆர்யா நல்லவரா கெட்டவரா, நன்மை செய்யப்போகிரவரா என்று முதலில் ஒன்றும் கணிக்க முடியவேயில்லை. சிறு வயதில் கொண்டு வந்து இந்த சாமியார் கூடத்தில் தனது மகனை இப்படி கூட விடுவார்களா என்று சந்தேக பட வைக்கிறார் பாலா. மகனைத் தேடி வந்த தந்தை இந்த சாமியார் கூட்டத்தில் தனது மகனை அத்தனை எளிதாய் கண்டு பிடிப்பது சற்று நெருடலைத்தான் இருக்கிறது. 'நான் கடவுள்' என்று சொல்லிக்கொண்டு அலையும் அகோரி கூட்டத்திலிருந்து தந்தை ஆர்யாவைக் தனது இல்லத்திற்கு கூட்டிக் கொண்டு வருகிறார். அகொரியின் அம்மா, ஆசையாய் மகனை சாப்பிட அழைகிறார். உனக்காக யாரும் இன்னும் சாப்பிடாமல் காத்திருப்பதாக கூறுகிறார். உடனே, அகோரி, இத்தனை வருடம் சாப்பிட்டயல்லவா என்று கேட்டு பெற்ற அம்மாவையே அதிர வைக்கிறார். நமக்கு மனம் வலிக்கிறது.
இப்படியிருக்கும் கட்டத்தில் ஒரு பிச்சைக்கார கூட்டத்தையும் அதற்கு ஒரு தலைவனையும், இக்கூட்டத்திற்கு உதவும் ஒரு போலீசையும், பிச்சையேடுக்கும் சிறு பிள்ளைகளையும் காட்டி நெஞ்சை உருக்கும் காட்சிகளை நமக்கு கண் முன் நிறுத்துகிறார் பாலா. கடவுளே, இப்படி கூட மனித ஜீவன்கள் நம்மை சுற்றி வாழ்கின்றனரா என்று நம்மை அழ வைக்கிறார் பாலா.

இக்கூட்டத்தில் கண் தெரியாத குருட்டுப் பெண் அம்சவல்லியாக வந்து சேர்கிறார் பூஜா. அவர் மிக அருமையாக பாலா சொல்வதை செய்து இருக்கிறார். பூஜாவிற்கு கட்டாயம் அவார்டு கொடுக்கலாம். அவ்வளவு உணர்வு பூர்வமான, எதார்த்தமான நடிப்பு. பல இடங்களில் நம்மை நெகிழவும், பல இடங்களில் அழவும் வைக்கிறார். அவருக்கு எழுதப்பட்ட வலுவான வசனங்கள் அவருக்கு ரொம்ப கை கொடுக்கிறது. ஜெயமோகனின் வசனங்கள், பல இடங்களில் கை தட்ட வைக்கிறது. முக்கியமாக, ஒரு ஊநமுற்ர பிச்சைக்காரன் பேசும் வசனங்கள், நம்மை சிந்திக்க வைக்கிறது.
சில நெருடல்கள்: எப்படி பூஜா ஒரு சர்ச்சுக்கு போகிறார்? பிறகு எப்படி கொடுமைக்கார கும்பலிடம் திரும்பவும் சிக்கி கொள்கிறார் என்று சரியாகவே காட்டவில்லை.
ஏன் சில பாடல்களை விட்டு விட்டார்கள் எனத் தெரியவில்லை.
இப்படி ஒரு சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
சில இடங்களில் சிலர் வேற்று மொழியில் பேசும் பொது தமிழ் வரிகளாக்கி காட்டியிருக்கலாம்.
அகொரியின் வயதான குரு சொல்லும் வசனத்தோடு படம் முடிகிறது.
நான் கடவுள். கொடுமைக்காரர்களை அழிப்பதும் கொடுமைகளை அனுபவிப்பர்களை அதிலிருந்து மரணம் என்கிற பெயரில் அவர்களை விடுவிப்பவதுமே அகொரியின் வேலை என்கிற வாக்கியங்களோடு முடிகிறது 'நான் கடவுள்'

No comments: